வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.;
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலம் ; வண்ண விளக்குகளால் ஜொலித்த பேராலயம் ; கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த சிறப்பு திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சிகள் நள்ளிரவு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.
இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதன்படி நள்ளிரவு(31ம் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்த வெளி கலையரங்கமான சேவியர் திடலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
இதை தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாணவேடிக்கை நடந்தது. பின்னர் 2021 ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொண்டனர். பின்னர் புத்தாண்டை வரவேற்று ஒருவரையருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதன்பின்னர் பேராலயம் சார்பில் புத்தாண்டை வரவேற்றனர்.
பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குதந்தையர்கள் கலந்து கொண்டனர். பேரலாயத்தை சுற்றி மரம், செடி கொடிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தியான மண்டபம் செல்லும் வழியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் மற்றும் அலங்கார வளைவு அமைக்கப்பட்டது.