கீழ்வேளூர் அருகே சாராய மூட்டைகள் பறிமுதல்- போலீசுடன் வாக்குவாதம்
நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே சாராய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பொதுமக்களுடன் போலீசார் வாக்குவாதம் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆழியூர் பிரிவு சாலையில் சாலையோர டீ கடையில் அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகள் கடத்தி வந்த இருசக்கர வாகனம் பன்னீர்செல்வம் மீது மோதியது.
இதில் பன்னீர்செல்வம் படுகாயமடைந்து அவரது கால் முறிந்தது. இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் புதுச்சேரி சாராயத்தை கடத்தி வந்த நபர்களை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த கீழ்வேளூர் போலீசார் சாராய கடத்தல்காரர்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கீழ்வேளூர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சாராய கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி சாராய பாக்கெட்டு மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பு எடுத்து சாராய கடத்தல்காரர்களை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் திருக்குவளையை சேர்ந்த ராஜவேல் மற்றொருவர் திருவாரூரை சேர்ந்த பார்த்திபன் என்பதும், தெரியவந்தது.
கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜவேல், பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.