நாகை அருகே கல்லார் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க மீனவர்கள் கோரிக்கை
நாகை அருகே கல்லார் கிராமத்தில் கடல் அரிப்பை தடுத்து குடியிருப்புக்குள் நீர் புகுவதை தடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நாகை அருகே கல்லார் கிராமத்தில் கடல் நீர் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டிணம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி கல்லார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு மீன்பிடியே பிரதான தொழிலாக இருப்பதால் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி சீர் செய்தல், வலை பின்னுதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர். மேலும் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் வீடுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லார் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லார் கிராமத்தில் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 50 அடி தூரம் தள்ளி கடல் இருந்தது. ஆனால் தற்பொழுது கொட்டப்பட்டுள்ள கற்களை 100 அடி தாண்டி கடல் நீர் வந்துள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது.
இப்படி நாளுக்கு நாள் கடல் நீர் உள்புகுவதால் மின்கம்பங்கள் மற்றும் கல்லார் கிராமம் விரைவில் கடல் நீர் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே தற்பொழுது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்தை கடல் நீர் உட் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.