நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
நாகையில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.;
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா, வேளாங்கன்னி அருகே செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை குப்பு முத்து மகன் செல்வம். இவர் கடந்த மாதம் கீழ்வேளூர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கிற்காக கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
மேலும் செல்வம் மீது கீழையூர், வேளாங்கன்னி, வெளிப்பாளையம் சீர்காழி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, சாராய வழக்குகள் உள்ளது. இதை தொடர்ந்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன் ஆகியோர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ்.
சூப்பிரண்டு செல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.