சாலை வசதி இல்லாததால், இறந்தவர் உடலை வயலில் தூக்கி செல்லும் அவலம்

எட்டுக்குடியில் சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயலில் இறங்கி சென்று அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-07-22 03:41 GMT

சாலை வசதி இல்லாமல் இறந்தவர் உடலை வயல்வெளியில் துாக்கிச் சென்றனர்.

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம் எட்டுக்குடி ஊராட்சியில் பூமிதானம் தெரு அமைந்துள்ளது. இங்கு சுமார் 9 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு செல்ல தார் சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு தனியார் வயல் வரப்பின் மீது நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும் , மழை காலங்களில் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் கையில் சுமந்து சென்று ஆட்டோவிலோ அல்லது ஆம்புலன்சிலோ ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், அங்கு யாரேனும் இறந்தால் அவர்களை சுமந்து கொண்டு தனியார் வயலில் இறங்கி  சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.  அந்த தெருவில் உள்ள அஞ்சம்மாள் என்ற முதியவர் இன்று உடல் நல குறைவால் இறந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய  சாலை வசதி இல்லாமல் விவசாயநிலத்தில் இறங்கி தூக்கிசென்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பிரேதத்தை தூக்கி செல்லும்போது கால் தடுமாறி கீழே விழுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு சாலை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News