நாகையில் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து பைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகையில் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-05-11 14:30 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 339 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16166 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 192 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தாலும் பைபர் படகுகள் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் பைபர் படகு மீனவர்கள் தங்கள் பிடித்து வரும் மீன்களை கடற்கரையோரத்தில் விற்பனை செய்து வந்தனர்.

மீன்களை வாங்குவதற்கு வெளியூரிலிருந்து அதிக அளவிலான நபர்கள் வருகை தந்ததால் நோய் பரவும் அபாயம் கருதி தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஊரடங்கு காலம் முழுவதும் மீன்பிடிக்க செல்வதில்லை என அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்

Tags:    

Similar News