ரூ.4 லட்சம் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் : இலங்கை கடற்படை அட்டூழியம்
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 20 பேர் கரை திரும்பினர். இரண்டு படகுகளில் இருந்த நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாக நாகை மீனவர்கள் புகார்.
சர்வதேச எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் திருகோணமலையில் சிறைபிடித்தனர்.
பின்னர் இரண்டு விசைப்படகுகளில் இருந்த 20 மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையினர் அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகளிடம், இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். பின்னர் தமிழக மீனவர்கள் 20 பேரும் அவர்களது இரு விசைப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் இன்று நாகை துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
துறைமுகம் வந்து சேர்ந்த மீனவர்களை கண்ட அவர்களது உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர். 2 விசைப்படகில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கொண்டதாக புகார் தெரிவித்தனர். தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்களை கைகளை பின்புறமாக கட்டி நீண்ட நேரம் படகில் நிற்க வைத்து அடித்ததாக வேதனை தெரிவித்தனர்.