எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
நாகை மீனவர்களை 9 பேரை படகுடன் கைது செய்து யாழ்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்;
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் சேவாபாரதியை சேர்ந்தவர் சிவா இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 9 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை கீச்சாங்குப்பம் சேவா பாரதியை சேர்ந்த சின்னதுரை (60), அதே பகுதியை சேர்ந்த சிவபாரதி ( 27 ), சௌந்தர்ராஜன் (34 ), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), அதே பகுதியை சேர்ந்த செல்வம்( 45 ), அக்கரை பே ட்டையை சேர்ந்தவர்கள் செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன்(55) ஆகிய 9 மீனவர்களை படகுடன் கைது செய்து யாழ்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளனர். பின்னர் மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள். அதே போல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்கள் என மொத்தம் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.