நாகையில் தமிழக காவிரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்..!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்த எடியூரப்பாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் தமிழக காவிரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-06-20 12:09 GMT

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கண்டிப்பாக மேகதாது அணை கட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் கருங்கன்னியில் உள்ள காவிரி ஆற்றின் நீர் ஒழுங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கர்நாடக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழக விவசாயிகள் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்தால் தங்களை உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.  பாரதப்பிரதமர் உடனே தலையிட்டு அணை கட்டுவதற்கான அனுமதி வழங்கக்கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News