ஞாயிறு முழு ஊரடங்கு ரத்தானதால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்தனர்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு ரத்தானதால் து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை பிறப்பித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில்,இந்த வாரம் அதற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வருகை தந்தனர்.மேலும் நாகை மாவட்டத்தில் அதிகாலை முதல் பெய்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். இந்நிலையில் மதியத்திற்கு மேல் படிப்படியாக மழை சற்று தணிய தொடங்கிய நிலையில், வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை, பழைய மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்பட்டது.
ஊரடங்கு உத்தரவில் மட்டுமே தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறையில் உள்ளது. அதன்படி பேராலயத்திற்குள் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியினை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு, தானியங்கி இயந்திரம் மூலம் கிருமிநாசினி வழங்கப்பட்டு தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.