நாகை மீன்பிடி துறைமுகத்தில் மூன்று மாவட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை
ஆக. 20-ஆம் தேதிக்குள் சுருக்குவலை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு.;
சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை உள்ளிட்ட மூன்று மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்வதெனவும்,. 20-ஆம் தேதிக்குள் சுருக்குவலை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நம்பியார்நகர், பூம்புகார் திருமுல்லைவாசல் ஆகிய 5 கிராம மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இதையறிந்த தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு அவர்களைத் தடுக்க விரைந்தனர். அப்போது நடுக்கடலில் திருமுல்லைவாசல் மற்றும் வானகிரி கிராம மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நாகை மீன்பிடி துறைமுகத்தில் நாகை மயிலாடுதுறை காரைக்கால் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை உள்ளிட்ட மூன்று மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் வரும் 20-ஆம் தேதிக்குள் சுருக்குவலை மீனவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாகை,மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த தீர்மானத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் மூன்று மாவட்ட மீனவர்களும் புகார் மனுவாக அளித்துள்ளனர். நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் எழுந்துள்ளதால், அப்பகுதி கடலோர கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.