நாகையில் டெங்கு பரவாமல் தடுக்க கலெக்டர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் கலெக்டர் அருண் தம்புராஜ் டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்ததுள்ளதன் காரணமாக, நாகையில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது, இதனிடையே நாகை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அப்பகுதியில் நிலவும் சுகாதாரம் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, தாமரைக்குளம், வெளிப்பாளையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கீச்சாங்குப்பம் மீனவ கிராம கடற்கரையோரங்களில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற வட்டார வளர்ச்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்ட ஆட்சியர், அப்பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்தவும், தேவையற்ற டயர், தேங்காய் சிரட்டை நீர்தேங்கும் பொருட்களில் கொசு உற்பத்தியாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் கொசு உற்பத்தி பொருட்கள் அனைத்தையும் அங்கிருந்து அகற்றினர்.