நாகையில் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றவருக்கு கலர் டிவி பரிசு
நாகையில் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டவருக்கு கலர் டிவி பரிசாக வழங்கப்பட்டது.;
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களின் பங்கேற்பு அதிகரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கீழையூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், சிறப்பு முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொது மக்களில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒருவருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்தநிலையில் கீழையூர் ஒன்றியத்தில் நடைபெற்ற முகாமில் 4500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பெயர் குலுக்கல் முறையில் தேர்வு வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியை சேர்ந்த R.பால்ராஜ் என்பவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான பரிசளிப்பு விழா இன்று கீழையூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் S.ராஜகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் வெற்றி பெற்ற பால்ராஜுக்கு கலர் டிவி பரிசளித்தார். நிகழ்ச்சியில் மருத்துவர் V.அலைமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சுமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.