துப்பாக்கி சூட்டில் இறந்த இராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

மேற்கு வங்காளத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நாகையை சேர்ந்த இராணுவ வீரர் உடல் 21 குண்டு முழங்க அடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2022-03-10 10:57 GMT
துப்பாக்கி சூட்டில் இருந்த இராணுவவீரர் உடல் நாகை அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் கீழையூரை சேர்ந்த ஞானசேகரன்(45) மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவில் பணியாற்றி வந்தார். மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடந்த சம்பவத்தில், இவரும் மற்றொரு வீரரும் பலியாகினர்.

இந்நிலையில் அவரது உடல் மேற்கு வங்காளத்திலிருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இராணுவ வாகனம் மூலமாக சொந்த ஊரான நாகை மாவட்டம், கீழையூருக்கு எடுத்து வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஞானசேகரன் உடலுக்கு முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்.எல்.ஏ. வுமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் ஞானசேகரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.அப்போது காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவர்ணக் கொடியை அவரது குடும்பத்தாரிடம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News