வேளாங்கண்ணியில் நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு
வேளாங்கண்ணியில் நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறன், ஹரிஹரன், மனோஜ்குமார் ஆகிய மூன்று இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிவேகமாக சென்ற அவர்கள் தெற்கு பொய்கை நல்லூரில் சாலையில் இருந்த வேகத்தடையை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். அப்போது வேகத்தடையில் நிலை தடுமாறி அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி உள்ளது.
இதில் மணிமாறன் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஹரிஹரன் மற்றும் மனோஜ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மனோஜ்குமார் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த மணிமாறன், ஹரிஹரன் உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவரும் ஹெல்மெட் அணியாமல் அதி வேகத்தில் சென்றது இவற்றிற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.