நாகையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.;
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகை மீனவர்கள்.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 11ஆம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தசிவகுமார் சகோதரர்கள், சிவநேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.இந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தன்பேட்டை, தரங்கம்பாடி, சந்திரபாடி, பெருமாள்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேரையும் இலங்கை கடற்படையினர் காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேருக்கும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது இரு விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு நாகை மீனவர்கள், பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.