நாகப்பட்டினத்தை அடுத்த வேளாங்கண்ணியில் கடலில் குளித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் சண்முகம் (45) கூலி வேலை செய்து வருகிறார். இவர், இவரது மனைவி சரிதா மற்றும் மகன் பரத் ( 17 ) அவரது உறவினர் மகன் தீபக்( 17) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 12 பேருடன் கடந்த 10-ந்தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் தீபக் மற்றும் பரத் ஆகிய இருவரும் கடலில் குளித்துள்ளனர் . அப்போது கடல் அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அதை பார்த்து கரையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனே அருகில் உள்ளவர்களின் உதவியுடன் பரத்தை மீட்டனர் .
மயக்க நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . தொடரந்து தீபக்கை தேடும் பணியில் போலீசார் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டனர் . இன்று காலை தீபக் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார். அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது குறித்து வேளாங்கண்ணி மற்றும் கீழையூர் கடலோர காவல்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.