விபத்தில் வாலிபர் பலி! அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் உருக்குலைந்தது
சூளகிரி அருகே விபத்தில் வாலிபர் பலி! அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் உருக்குலைந்தது, போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ்த்தெரு பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன், இவரது மகன் ஹரி பிரசாத். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிபிரசாத் கிருஷ்ணகிரிக்கு டூ வீலரில் புறப்பட்டுள்ளார். கொல்லப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சாலையில் மயங்கி விழுந்தவர் மீது அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து ஏறியதால் உடல் உருக்குலைந்த நிலையில் ஹரிபிரசாத் பரிதாபமாக உயிர் இழந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உருக்குலைந்த உடலை கண்டு திடுக்கிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். ஆடைகளை வைத்து விசாரித்ததில் அவர் ஹரிபிரசாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து இன்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய வாலிபர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறிச் சென்றதில் உடல் உருக்குலைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.