கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மேலாண்மை குறித்த பயிற்சி

கிருஷ்ணகிரி அடுத்த தவளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-07-18 08:45 GMT

விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அடுத்த தவளம் கிராமத்தில், தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலுமிச்சங்கிரி கே.வி.கே மண்ணியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் குணசேகரன், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் பூச்சி நோய் வருமுன் காக்கும் பொருட்டு பயிரின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க சீரான சத்து மேலாண்மையாக மரம் ஒன்றுக்கு (5 வருடத்திற்கு மேற்பட்ட வயது) 750 கிராம் யுரியா, 2 கிலோ சூப்பர், 2 கிலோபொட்டாஷ் உடன் 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, 6 மாதத்திற்கு ஒருமுறை அடி மரத்தில் இருந்து மூன்றடி தள்ளி, இரணடடி ஆழத்தில் பள்ளம் பறித்து இட வேண்டும். நுண்ணூட்ட உரக்கலவை ஒரு மாதத்திற்கு 500 கிராம் வீதம், மணலுடன் கலந்து மரத்தின் வேர் பகுதியை சுற்றி, 6 மாதத்திற்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.  

தென்னையில் கருத்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பிரக்கானிட் ஒட்டுண்ணி ஏக்கருக்கு 1000 எண்கள் வெளியிட வேண்டும். சுருள் வெள்ளை, ஈ, கரும்பூஞ்சாணை தாக்குதலை கட்டுப்படத்த மைதா மாவு பசை, லிட்டருக்கு 50 கிராமுடன், 5 கிராம் பச்சரிசி மாவு என்ற வீதத்தில் கலந்து மரத்தின் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு இரண்டு இன கவர்ச்சி பொறி வைத்து காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டை கவர்ந்து அழிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்தபட்சம் மரத்திற்கு 180 முதல் 200 காய்கள் வரை மகசூல் பெறலாம் என்றார்.

இதில் வேளாண்மை அலுவலர் பிரியா பங்கேற்று, அரசு வழங்கும் மானியத் திட்டங்களான நுண்ணூட்ட உரம், விதைகள், உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்திலும், தமிழ்நாடு மானாவரி தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மானியமாக எக்டேருக்கு ரூ.1250ம் வழங்கப்படுகிறது என்றார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் சண்முகம் மற்றும் பார்வதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News