சாமல்பள்ளத்தில் மேம்பாலம் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்
மேம்பாலம் அமைத்து தரக்கோரி, சாமல்பள்ளம் பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை அருகே உள்ள சின்னகானப்பள்ளியை சேர்ந்த, 18 வயது மாணவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 24ம் தேதி மாலை கல்லூரி முடிந்து, சாமல்பள்ளம் பகுதியில் ஊருக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி மோதி பலியானார். இதேபோல், அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிரிழப்பு நேரிட்டு வருகிறது.
இந்நிலையில், பஸ் ஸ்டாப்பில் இறங்கும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனக்கோரி, சாமல்பள்ளம் பள்ளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் அமைதியான முறையில் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சூளகிரி வட்டாட்சியர் நீலமேகம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.