கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி
கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., சிவசாமி, ஆகியோர் நேற்று இரவு கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே ஸ்கூட்டியில் சென்றவரை மடக்கினர். அதில் அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பதும், கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.
இதையடுத்து வீராசாமி அதே பகுதியில் 32 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 1,600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.