வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா
கிருஷ்ணகிரியில், வீட்டுமனை பட்ட வழங்கக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில், வேப்பனஹள்ளி ஒன்றிய அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், பூதிமுட்லு புதிய காலனியில் வசிக்கும் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க கோரி, தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் மாதேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், ராமமூர்த்தி, நாகராஜ், கராமத், கிருஷ்ணன், ராஜப்பா, ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்டாலின்பாபு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேப்பனஹள்ளி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சி பூதிமுட்லு கிராமம் புதிய காலனியில் 30க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீட்டுமனை பட்டா வழங்காததால், மின் இணைப்பு பெற முடியாமல் இருட்டில் மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.