காவல் நிலையம் முன் ஒரு கிலோ வெள்ளி, 113 கிராம் தங்கம் கொள்ளை
வேப்பனப்பள்ளியில் காவல் நிலையம் முன் ஒரு கிலோ வெள்ளி, 113 கிராம் தங்கத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே காவல் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், அடகுக் கடை உரிமையாளரிடம் சுமார் ஒரு கிலோ வெள்ளி மற்றும் 113 கிராம் தங்கம் கொண்ட பை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் மோகன்லால் என்பவர் அம்பிகா அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு கடையில் இருந்த நகைகளை இரண்டு பையில் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது வேப்பனப்பள்ளி காவல் நிலையம் முன்பு வரும்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு நபர்கள் திடீரென்று வண்டியின் அருகே வந்து அவர் முன்னே வைத்திருந்த நகை பையை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டனர்.
இதையடுத்து நகைப்பை எடுத்துக்கொண்டு செல்லும் இருசக்கர வாகனத்தை மோகன்லால் தொடர்ந்து துரத்தி சென்றுள்ளார். ஆனால் அவர்கள் வேகமாக சென்று விட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மோகன்லால் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது காவல்நிலையம் முன்பே அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து மோகன்லாலிடமிருந்த பையைப் பிடுங்கி செல்வது சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் போலீசார் நகையை திருடிச்சென்ற இரு நபர்களையும் தேடி வருகின்றனர். காவல் நிலையம் முன்பு இது நடந்த திருட்டு சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.