கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி: அமைச்சர் காந்தி ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை, அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மைய பகுதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து போலுப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் சூளகிரி ஒன்றியம் புக்கசாகரம் ஊராட்சியில் என்.டி.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, செல்லகுமார் எம்.பி., எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் அமைச்சர் காந்தி, நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கேட்டர்பில்லர் நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் சிலிண்டர்களும், டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் 25 கியாஸ் கொள்கலன்கள், டர்டா எலக்ட்ரானிக்ஸ் றுவனம் சார்பில் 10 ஆக்சிஜன் கொள்கலன்கள் என மொத்தம் 35 ஆக்சிஜன் கொள்கலன்கள், மருத்துவ உபகரங்கள், நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன். தளி ஊராட்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடக்கிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.