சூளகிரி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 20 பேர்
சூளகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறிய காயங்களுடன் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி என்னுமிடத்தில் ஓம்சக்தி பக்தர்கள் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் 20 பேர் பயணித்த நிலையில், மூன்று பக்தர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 20 ஓம் சக்தி பக்தர்கள் உயிர்தப்பினர். சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பெங்களூர் பன்னார்கட்டா அடுத்த உளிமாவு கிராமத்திலிருந்து மேல்மருவத்தூர் ஓம் சக்தி ஆலயத்திர்கு புறப்பட்டு வந்ததாகவும், டிரைவர் அப்சல் மினி பேருந்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பன்னார்கட்டா உளிமாவு கிராமத்தை சேர்ந்த சந்திரம்மா வயது 60, ரத்னாம்மா வயது 38, மற்றொரு நபர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பினனர் மாற்றுப்பேருந்து வரவழைக்கப்பட்டு 17 ஓம்சக்தி பக்தர்கள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.