சில ஊடகங்கள் உண்மைக்கு மாறாக உள்ளன: கே.பி.முனுசாமி பாய்ச்சல்
நிறைய ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை சொல்கின்றன என்று, கே.பி.முனுசாமி பேட்டி;
வேப்பனப்பள்ளி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
அலுவலகத்தை திறந்து வைத்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேப்பனப்பள்ளி தொகுதி மக்களின் நலன் கருதி, ராயக்கோட்டை, சூளகிரியிலும் எம்எல்ஏ அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தொண்டர்களின் உணர்வை தூண்டி வேகப்படுத்துவதற்காக, அக்கட்சியின் தலைவர் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என கருத்து தெரிவித்து இருப்பார். நாட்டு மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்பது குறித்து 2026-ல் தான் தெரியும்.
நிறைய ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை சொல்கின்றனர். இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை, ஊடகம் தொடர்பாக கருத்தை தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்களுக்கு அவரது கருத்து தவறாக தெரியும். நியாயமான செயல்படும் ஊடகங்கள், பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை வரவேற்கும் என்றார்.