கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உழவர் வயல்வெளிப் பள்ளி திட்டம் துவக்க விழா
விவசாயிகளை விஞ்ஞானியாக்கும் நோக்கில் தாசிரிப்பள்ளி கிராமத்தில் உழவர் வயல்வெளிப் பள்ளியின் துவக்க விழா நடந்தது.;
கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் ஐசிஏஆர் வேளாண்மை அறிவியல் மையம், புதிய வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் நிலங்களில் 10 & 15 சதவிகித மகசூல் இழப்பானது பூச்சி மற்றும் நோய் மூலம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நெல் சாகுபடி செய்யும் 30 விவசாயிகளை தேர்வு செய்து, விவசாயிகளை விஞ்ஞானியாக்கும் நோக்கில் உழவர் வயல் வெளிப் பள்ளியினை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தாசிரிப்பள்ளி கிராமத்தில் உழவர் வயல்வெளிப் பள்ளியின் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் தலைமை வகித்து, அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
மேலும், நெல் சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை விளக்கி கூறினார். கிருஷ்ணகிரி வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் பங்கேற்று, வேளாண்மை துறையின் திட்டங்களையும், விவசாயிகள் பூச்சி மருந்தினை கையாள வேண்டிய முறைகளை விளக்கி கூறினார். வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் செந்தில்குமார் (வேளாண் விரிவாக்கம்) 14 வாரம் நடத்தப்படும் உழவர் வயல்வெளிப் பள்ளியின் நோக்கம் மற்றும் பயன்களை விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, செயல்விளக்க விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர் புஷ்பாகரன், அட்மா திட்டத்தின் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், பார்வதி மற்றும் தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 35 விவசாயிகள் கலந்து கொண்டனர்.