புதிய அணையின் செயல்பாட்டை கர்நாடகா நிறுத்த வேண்டும்: செல்லகுமார் எம்.பி.
கர்நாடகா அரசு, விதிகளை மீறி கட்டியுள்ள புதிய அணையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லகுமார் கூறினார்.;
கர்நாடக அரசு கட்டி வரும் புதிய அணை
இது குறித்து, கிருஷ்ணகிரியில் செல்லகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு, யார்கோள் என்னும் இடத்தில் அணை கட்டி உள்ளது. இது இந்திய ஒருமைப்பாட்டிற்கு பாதகத்தை விளைவிக்கும் செயல். 350 ஏக்கர் பரப்பளவில் ரூ.சு30 கோடி மதிப்பீட்டில் அந்த திட்டத்தை கர்நாடகா செயல்படுத்த முன் வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பின்னர் அந்த வழக்கு நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்காக குழு அமைக்க வேண்டும் என்று கூறிய நேரத்தில் அதிமுக.அரசு மெத்தனமாக இருந்ததால் கொரோனா காலத்தை பயன்படுத்தி, கர்நாடகா அரசு அணையை கட்டி உள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்ட விவசாயம் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். எனவே அணையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை கர்நாடகா எந்த சூழ்நிலையிலும் தடுக்காமல் வழங்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை, தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உடனடியாக கர்நாடக அரசை வலியுறுத்தி மதகுகளை பொருத்தி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.