குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு

குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-31 11:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பட்டு. இவர் மதியம் வெளியில் சென்றார். அப்போது முகத்தில் முகக்கவசம் அணிந்து வந்த இருவர், பட்டுவின் கண்ணில் மிளகாய் பொடி தூவியும், கத்தியால் தாக்கியும், அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் கொலுசை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

காயமடைந்த பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் பட்டுவின் உறவினர்களான மணி , பெருமாள் இருவர் மீதும் பட்டுவுக்கு நிலத்தகராறு இருந்து வந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில்தான், தற்போது பட்டு மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்துள்ளனர். இதனால் நில பிரச்சினைக்கும் இந்த நகை பறிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் குருபரப்பள்ளி போலீசார் இன்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News