உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவர் சிவமணி, தமிழ்நாட்டில் உள்ள 385 ஒன்றியங்களின் பெயர்களை 3 நிமிடம் 17 வினாடிகளில் ஒப்புவித்தார். இதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி கீர்த்தனா, 1330 திருக்குறள்களை ஐஸ் குச்சிகளில் எழுதியுள்ளார்.
இதனை பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுத்து, சென்னையில் உள்ள யூனிவர்ஷல், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்டு எனப்படும் உலக சாதனை புத்தக தொகுப்புக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாதனையை அங்கீகரித்து உலக சாதனை அமைப்பு சான்றிதழ் வழங்கியது.
மாணவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவர்களை அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியின் போது வட்டார கல்வி அலுவலர் பெலிசிட்டாமேரி, தலைமை ஆசிரியை விஜயா, மேற்பார்வையாளர் மகேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ்குமார், ஆசிரியர்கள் ஸ்ரீகண்டைய்யா, சகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், சான்றிதழ் பெறுவதற்கு தேவையான உதவிகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைச்செல்வி, அனுஷா ஆகியோர் செய்திருந்தனர்.