வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் 21 கிராமங்களில் தீவிர பிரசாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் முருகன் சூளகிரி ஒன்றியத்தில் 21 கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக சார்பில், மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ., போட்டியிடுகிறார். நேற்று அவர் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட சாமல்பள்ளம், ஒட்டையனூர், பஸ்தலப்பள்ளி, காளிங்கவரம், சிம்பிள்திரடி, சென்னப்பள்ளி, சூளகிரி, மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, ஒசஅள்ளி, உலகம், உல்லட்டி, சாமனப்பள்ளி, துப்புகானப்பள்ளி, உத்தனப்பள்ளி, அளேசீபம், அகரம் முருகன் கோவில், பீர்ஜேப்பள்ளி, சானமாவு, சப்படி ரோடு, மருதாண்டப்பள்ளி என 21 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடையே முருகன் எம்எல்ஏ., பேசுகையில்,
இன்னும் இரண்டு மாதங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். அப்போது நமது அனைவரது கோரிக்கையும் நிறைவேற்றப்படும். குறிப்பாக விவசாயத்தை நம்பி வாழும் நாம், தண்ணீரில்லாமல் படும் கஷ்டத்தை போக்கிட அனைத்து கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் யானை போன்ற வன விலங்குகளால் ஏற்படும் நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும். மேலும், தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும், குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ-. ஆயிரம், டவுன் பஸ்களில் இலவச பயணம் போன்ற அனைத்து திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே, அவர் தமிழக முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர அனைவரும் வாக்களித்து வெற்றிப் பெற செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.