விளைபொருட்களை கொண்டு செல்ல சிறுபாலம் அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையின் நீர்த்தேக்க பகுதியில், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல வசதியாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-07-01 15:55 GMT

கே.ஆர்.பி.அணை நீர்த்தேக்க பகுதியில்  விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல வசதியாக சிறுபாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி.அணை உள்ளது. இந்த அணையின் நீர்த்தேக்க பகுதியை சுற்றி பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தாளாப்பள்ளி, தின்னகழனி, சின்னநாட்றம்பள்ளி, வட்டுகம்பட்டி, துறிஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

அணை அதன் முழு கொள்ளளவை தண்ணீர் எட்டும் போது, மேற்குறிப்பிட்ட கிராமங்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், தாளாப்பள்ளி ஏரி மற்றும் கே.ஆர்.பி அணையை இணைக்கும் கால்வாய் செல்கிறது. அதிலும் தண்ணீர் தேங்கி நின்றுவிடுகிறது.

இதனால், இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விளைபொருட்களை, தங்கள் வீட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறு கொண்டுவர வேண்டும் என்றால் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். இதனால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை எடுத்து செல்ல முடியாமலும், தங்கள் நிலத்தில் விளையும் விளைபொருட்களை எடுத்து வர முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.

எனவே, மழை காலங்களிலும், கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவை தண்ணீர் எட்டும் காலங்களிலும்,  விவசாயிகள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக, கே.ஆர்.பி அணை மற்றும் தாளாப்பள்ளி ஏரி கால்வாய்க்கு இடையே டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில், சிறு பாலம் அமைத்து கொடுக்க உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News