வறண்ட ஏரிகளுக்கு அணை நீர்: கிராம மக்களிடம் கோட்டாட்சியர் கருத்து கேட்பு

வறண்ட ஏரிகளுக்கு அணை நீர் விடுவது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-10 14:52 GMT

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் ஒசூர் கோடாட்சியர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே வறண்ட ஏரிகளுக்கு நீர்த்தேக்க அணை நீரை நிரப்ப வேண்டும் என கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கிராம மக்களிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்தில் ஓசூர் கோட்டாட்சியர் பங்கேற்று கருத்துக்களை கேட்டறிந்தார்.

சூளகிரி  அருகே உத்தனப்பள்ளி பீர்ஜேப்பள்ளி கொம்பே பள்ளி பகுதிகளில் உள்ள ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏரிகள் ஆறுகள் நிரம்பி கிராமங்களை மூழ்கடித்தது. இந்நிலையில் இங்குள்ள ஏரிகள் மட்டும் வறண்டு காணப்படுகிறது.

அப்பகுதி மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று கடந்த அதிமுக ஆட்சியில் தர்மபுரி மாவட்டம் தூள் செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீரைக் கொண்டு செல்வதற்கு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அந்த பணிகள் இன்னும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் பீர்ஜேப்பள்ளி பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகள் வறண்டு காணப்படுவதால் நிலத்தடி நீர் பெருமளவு குறைந்து விவசாயம் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததன் அடிப்படையில், கடந்த வாரம் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று ஒசூர் கோட்டாட்சியர் தேன்மொழி தலைமையில் வருவாய்த்துறையினர் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் கிராமத்திற்கு சென்று கிராம மக்களிடம் ஆலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து தொரப்பள்ளி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றையும் பார்வையிட்டார். இதையடுத்து கிராம மக்களிடம் தமிழக அரசுக்கு தங்களுடைய கோரிக்கையை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News