கிருஷ்ணகிரியில் காலி குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு
கிருஷ்ணகிரி மாவட்டம், மாமிடிகானப்பள்ளி கிராம பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சின்னமனவாரணப்பள்ளி பஞ்சாயத்து மாமிடிகானப்பள்ளி கிராம பொதுமக்கள் இன்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறுப்பட்டுள்ளதாவது: மாமிடிகானப்பள்ளி கிராம மக்கள் கடந்த 2 மாதங்களாக ஆழ்துளைக் கிணற்றில் குடிநீர் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம். இது குறித்து கடந்த மாதத்தில் அனைத்து துறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. தற்போது 2 கி.மீ., தொலைவு சென்று வயதானவர்களும், குழந்தைகளும் குடிநீர் எடுத்து வருகின்றனர்.
ஆனால் குடிநீர் வழங்கும் கிணற்றின் உரிமையாளர்களும், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது என்று குடிநீர் எடுக்க தடுத்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம். எனவே குடிநீர் பற்றாக்குறையைப் போக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமிடிகானப்பள்ளி கிராமத்தில், ரூ.2.50 லட்சம் மதிப்பில் பஞ்சாயத்து நிதியில் இருந்து உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிராமத்தின் நடுவில் அமைக்காமல் யாருக்கும் பயன் இல்லாத இடத்தில் மின் விளக்கு அமைத்துள்ளதால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே உயர்மின் கோபுர விளக்கை கிராமத்தின் நடுவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.