மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி
கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது. இதற்கு வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காட்சியில் மண்ணின் வகைகள், அதன் முக்கியத்துவம், உரங்களின் பயன்பாடு, இயற்கை வேளாண்மை முறை, தென்னையில் பூச்சி கட்டுப்பாடு ஆகியவை செயல் விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டது.
விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை மூலம் விதையின் முக்கியத்துவம் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன் கண்காட்சி மூலமாக விளக்கி கூறினார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை மற்றும் ஐ.சி.ஏ.ஆர். மற்றும் கே.வி.கே. மூலம் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கண்காட்சி மூலம் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, விவசாயிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சிகள் நேர்முகமாக நடத்த இயலாத காரணத்தால் பயிற்சி முழுமை அடையாத நிலையில் இருந்தது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் இனி வரும் காலங்களில் பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் அதிக அளவில் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது, துவரை நாற்று நடவினை இயக்குநர் நடவு செய்து துவக்கி வைத்தார்.
கூட்டத்தில், பேசிய வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.