குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளியில் இன்று கூடிய ஆட்டு சந்தையில், ரூ. 7 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
பக்ரீத் பண்டிகை வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமியர்கள், ஒட்டகம், ஆடு, மாடுகளை பலியிட்டு ஏழை எளியோருக்கு இறைச்சியை தானமாக வழங்குவர். கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடும். வழக்கமாக இந்த சந்தையில் அதிக அளவில் ஆடு மற்றும் மாடுகள் விற்பனை செய்யப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் குந்தாரப்பள்ளி சந்தைக்கு வந்து ஆடுகளை இறைச்சிக்காக வாங்கி செல்வார்கள். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று குந்தாரப்பள்ளியில் கூடிய வாரச்சந்தையில் அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைகிராமங்களில் இருந்தும் அதிக அளவில் ஆடு மற்றும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மழையை பொருட்படுத்தாமல் குந்தாரப்பள்ளியில் வியாபாரிகள் போட்டி போட்டிக்கொண்டு ஆடு மற்றும் மாடுகளை வாங்கி சென்றனர். வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
அதிகபட்சமாக ஒரு ஆடு 25 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. இன்று கூடிய சந்தையில் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து எடைக்கு தகுந்தார் போல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன குந்தாரப்பள்ளியில் சந்தையில் மாட்டின் விலையும் அதிகரித்திருந்தது. ஏர் ஓட்டும் திறன் கொண்ட மாடுகளையும் வியாபாரிகள் இறைச்சிக்காக வாங்கி சென்றனர்.