ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மினி வேனுடன் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி, மினி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-26 05:15 GMT

கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பகுதியில் ரேஷன் பொருட்களை வாங்கி, ஆந்திராவிற்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ சிவசாமி மற்றும் போலீசார், காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி, 250 கிலோ கோதுமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வேனில் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலம் சந்திபுரம், சோளசெட்டலபள்ளி கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா(26) என்பது, அவர் தனது வாகனத்தில், கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கோதுமையுடன், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News