கிருஷ்ணகிரி அருகே தூங்கி கொண்டு இருந்த மாமனார் தலையில் கல்லை போட்டுக்கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளியை அடுத்த பச்சிகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் தூங்கி கொண்டு இருந்தார். அந்த சமயம் மாடிக்கு வந்த வெங்கட்ராமனின் மருமகள் நாகராணி அருகில் இருந்த செங்கல்லை எடுத்து வெங்கட்ராமனை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் நாகராணியின் மகன் மேலே சென்று பார்த்த போது வெங்கட்ராமன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து குருபரபள்ளி போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மருமகளே மாமனாரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மாமனாரை கொலை செய்த நாகராணியை கைது செய்து விசாரித்ததில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.
மேலும் தனது மகனை விஷம் வைத்து கொல்வது போல் தனக்கு தோன்றியதாகவும் அதனால் கொலை செய்தேன் எனவும் நாகராணி தெரிவித்து உள்ளார்.மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.