கிருஷ்ணகிரி விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் முனுசாமி இவருடைய மனைவி அகிலா. இவருக்கு ஓலைப்பட்டி கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் இருந்தது . இந்நிலையில் தொழிற்பேட்டைக்காக அரசு அந்த நிலத்தை கையகப்படுத்தியது. இதற்கு உரிய இழப்பீடு வேண்டி அகிலா 2014 ஆம் ஆண்டு கோர்ட் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். வழக்கை விசாரித்த ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம் 2018 ல், அகிலாவிற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தொகை அகிலாவிற்கு வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக அகிலா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.
இழப்பீடு வழங்காத காரணத்தினால் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவின் பேரில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை மேற் கொள்வதற்காக ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள், கணினிகள் ஆகியவற்றை அலுவலக வளாகத்திற்கு வெளியே கொண்டு வந்தனர்.
தாசில்தார் அலுவலக வளாகம் முன் நிறுத்தப்பட்டிருந்த தாசில்தார் ஜீப்பில் ஜப்தி நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தாசில்தார் ஆபீஸ் வந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த ஜப்தி நடவடிக்கைகள் வருவாய்த்துறை ஊழியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் வேளையில் இந்த ஜப்தி நடவடிக்கைகள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.