கிருஷ்ணகிரியில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
மெய்யாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மெய்யாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களுக்கென்று சொந்த நிலமோ, வீடோ இல்லாத நிலையில், மெய்யாண்டப்பட்டி நத்தம் புறம்போக்கு கிராம சர்வே எண். 45/10ல் 10 ஆண்டுகளுக்கு மேலாக 33 குடும்பத்தினர் நிரந்தரமாக குடியிருந்து வருகிறோம்.
இது தொடர்பாக பட்டா வேண்டி பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. தற்சமயம் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர், நாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
வெளியேறவில்லை என்றால் வீட்டை இடித்து தரை மட்டமாக்குவோம் என அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள். இந்த வீட்டை விட்டால் வாழ்வதற்கு வேறு வழியில்லை. எனவே அந்த இடத்தை ஆய்வு செய்து நாங்கள் நிரந்தரமாக தங்க வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம்
அனுமந்தீர்த்தம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இப்பள்ளி அமைய உள்ள இடத்தை மெய்யாண்டப்பட்டியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் சின்னதம்பி போன்றவர்கள் போலி பத்திரம் தயாரித்து விற்றுள்ளனர்.
பள்ளிக்கு அருகில் சிலர் குடிசை அமைத்து வசிக்கின்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, குடிசைகளை அப்புறப்படுத்தி, பள்ளி நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சர்வே எண், 45/10ல் உள்ள அரசு கிராம நத்த புறம்போக்கில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கால தாமதம் ஏற்பட்டால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.