6 நூற்பாலைகள் ரூ.12 கோடியில் புனரமைக்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
தமிழ்நாட்டில், 6 நூற்பாலைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என, அமைச்சர் காந்தி தகவல் கூறினார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அப்போது முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆய்வை தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆரல்வாய்மொழி, துத்துக்குடி மாவட்ட பாரதி கூட்டுறவு நூற்பாலை, எட்டையபுரம், தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலை, அறந்தாங்கி, ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
முதற்கட்டமாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீதமுள்ள நூற்பாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழக அரசால் ரூ.7.30 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு வணிக ரீதியான உற்பத்தியை தொடங்கி செயல்பட்டு வந்தது.
இந்த நூற்பாலைக்குச் சொந்தமாக மொத்தம் 26.21 ஏக்கர் நிலம் உள்ளது. ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழக அரசின் நிதியுதவியுடன் ஆலை ரூ.30 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது 20,160 கதிர்களுடன் ஆலை செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் அரசு, மொத்தம் ரூ.28.84 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம், ஆலையின் உற்பத்தி திறன் அதிகரித்ததுடன், அரசின் திட்டங்களுக்கு தேவையான நூல் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டும், தொழிலாளார்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சர் காந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், பணி ஓய்வு பெற்ற 2 பணியாளர்களுக்கு பணிக்கொடை நிலுவைத் தொகை தலா ரூ.50,000&க்கான காசோலைகள் மற்றும் ஒரு பணியாளருக்கு மருத்துவ செலவிற்காக ரூ.10,000&க்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (துணிநூல்) சாரதி சுப்ராஜ், மேலாண்மை இயக்குநர் வரதராஜன், கூட்டுறவு நூற்பாலை மேலாளர் அமல்ராஜ், ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.