ஊத்தங்கரையில் 2 வீடுகளில் ரூ.50 லட்சம், 20 பவுன் நகைகள் திருட்டு
ஊத்தங்கரையில் 2 வீடுகளில் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). அவரது வீட்டுக்கு அருகில் வசந்தகுமார் (37) என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இருவரும், வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் சிவக்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்தது.
இதுபற்றி, ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சிவக்குமாரின் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கமும், 20 பவுன் தங்க நகைகளும், வசந்தகுமார் வீட்டில் ரூ.37 ஆயிரம் பணமும், ஒன்றரை பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி நகைகள் திருட்டு திருட்டு போனது தெரியவந்தது. சிவக்குமார், சில நாட்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணம் ரூ.50 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.
இந்த திருட்டு குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. ஊத்தங்கரையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.