கிருஷ்ணகிரி அருகே ஆடுகளை கொன்றது சிறுத்தையா ? பொதுமக்கள் பீதி
கிருஷ்ணகிரி அருகே ஆடுகளை கொன்றது சிறுத்தையா என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.;
கிருஷ்ணகிரியை அடுத்த கரடிகுட்டை அருகே உள்ள கொத்துப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர், தனது வீட்டின் முன்பு 4 ஆடுகளை கட்டியிருந்தார்.
இந்நிலையில், அதிகாலை நாய் குறைக்கும் சப்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, ஒரு ஆடு கழுத்தில் ரத்த காயத்துடன் உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மற்ற 3 ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்றார். அங்கு ஒரு ஆடு மயங்கி விழுந்து இறந்துள்ளது. இதையடுத்து அருகில் சென்று பார்த்த போது அந்த ஆட்டின் கழுத்தில் ரத்த காயம் இருந்துள்ளது.
அத்துடன் அவர் நின்றிருந்த பகுதியில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கை அவர் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை செய்தனர். ஆடுகளை கொன்றது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது மர்ம விலங்கா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்த தகவல் பரவியதால் கொத்துப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.