பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-31 05:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், கொட்டிலேட்டி, அண்ணா நகர், உச்சங்கொல்லை, எர்கேட் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் வருவதில்லை. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும், கோரிக்கையினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து, தகவல் அறிந்த பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், இன்னும் ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News