குளித்தலை அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு
குளித்தலை அருகே வயலுக்கு சென்ற பெண் மீது இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.;
குளித்தலை அருகே வடக்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்த பொன்னாம்பலம் என்பவரின் மனைவி வள்ளி (50). இவர் கூலி தொழிலாளி, இவர்களுக்கு முருகன் (34), ரமேஷ் ( 25 ) என்ற 2 மகன்களும் தேவி என்ற 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளித்தலை பகுதி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் கூலி தொழிலாளி வள்ளி நெல் பயிர்களுக்கு களை எடுக்கும் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் ஆடுகளுக்கு இழை பறிக்க வயல் வெளிக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடம் இடி வள்ளியை தாக்கியுள்ளது. இதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தெற்கு நங்கவரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.