குளித்தலை அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்

பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

Update: 2023-04-23 09:07 GMT

குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சாப்பூர் கிராமத்தில் குமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருச்சாப்பூர் கிராம மக்களுக்கு கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். மேலும் தெருக் குழாய்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே குடிநீர் குறைவான அளவில் வருவதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து பொய்யாமணி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் நங்கவரம் பெட்டவாய்த்தலை ராணி மங்கம்மா சாலையின் குறுக்கே திருச்சாப்பூர் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் குறுக்கே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் ரூபினி, நங்கவரம் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News