கரூரில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம்

கரூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

Update: 2021-05-19 03:19 GMT

கரூர் நகரில் உள்ள கஸ்தூரிபா தாய் சேய் நல விடுதியில் கொரனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. கரூர் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் இங்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிகழ்வதால், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுபவர்கள் தினசரி இந்த தாய் சேய் நல விடுதிக்கு வந்து தடுப்பூசி வந்துள்ளதா என கேட்டுச் செல்கின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களில் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கஸ்தூரிபா தாய், சேய் நல விடுதியில்   கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமார்100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இரண்டாவது தவணை மட்டுமல்லாது, முதல் தவணை ஊசி செலுத்திக் கொள்ளவும் அதிக அளவில் திரண்ட மக்கள் வரிசையாக இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

இதனால் அந்த இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.உடனடியாக கஸ்தூரிபா தாய், சேய் நல விடுதி மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கரூர் நகர காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தினர்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள நின்ற பொதுமக்களை ஒழுங்குபடுத்தி் கண்காணித்தனர். இதையடுத்து பொது மக்கள் சிரமம் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News