உடல் நிலை சரியில்லாதவரை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்
குளித்தலையில் சாலை வசதி இல்லாததால் ஒரு கிலோ மீட்டருக்கு உடல் நிலை சரியில்லாதவர்களை கட்டிலில் தூக்கிச் செல்கின்றனர்.;
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது வார்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் பலமுறை பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளித்தும், இன்றுவரை கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருதூர் பேரூராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையில் விஸ்வநாதபுரத்திற்குச் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் மழை நீர் தேங்கி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் செல்ல முடியாத அளவிற்கு வாய்க்கால் போல் மழை நீருடன் சேறும் சகதியுமாக உள்ளது. இதில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றால சிக்கி பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாக மக்கள் கூறுகின்றனர்.
இன்று 70 வயது முதியவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 வாகனத்திற்கு அழைத்தபோது வாகனங்கள் உள்ளே வர முடியாது எனக் கூறி ஒரு கிலோமீட்டருக்கு வெளியே உள்ள சாலையில் நின்றது, அப்பகுதி மக்கள் முதியவரை கட்டிலில் படுக்க வைத்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சேறும் சகதியும் கூடிய மண் சாலையில் தூக்கி வந்து சாலையில் இருந்த 108 வானத்தில் ஏற்றி விட்டனர்.
தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்கள் சேரில் சிக்கி சிரமப் படுவதாகவும், நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்குச் செல்ல ஒரு கிலோமீட்டர் நடந்து வரும் அவல நிலையும் ஏற்படுவதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் நோயாளிகள் சிலர் உயிரிழப்பதாகவும், அப்பகுதி மக்கள் கூறி உடனடியாக தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும், மருதூர் பேரூராட்சியில் தலையிட்டு சாலை அமைத்தும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற பேரூராட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.