மழை நின்றாலும் குறையாத பாதிப்புகள் - தவிக்கும் குமரி மக்கள்

குமரியில் கனமழை நின்றாலும் பாதிப்புகள் குறையாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.;

Update: 2021-10-19 13:15 GMT

குமரியில் மழையால், குடியிருப்புகளை  சூழ்ந்துள்ள வெள்ளம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையாலும், மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகவும் அணைகள் நிரம்பி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து 28 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஏற்கனவே மலை பகுதிகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளம் ஒன்றிணைந்து காட்டாற்று வெள்ளமாக உருவானது, இதன் காரணமாக கோதையாறு, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மேலும் மூக்கரைச்சல், கோலமடக்கு உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது, இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும்,  சாலைகள் பாலங்கள் எங்கு இருக்கிறது என்பது தெரியாத நிலையில் களியல், குலசேகரம் உள்ளிட்ட 7 கிராமங்கள் உட்பட மேற்கு பகுதியில் உள்ள 40 சதவிகித ஊர்களுக்கு பொது போக்குவரத்து முடங்கி உள்ளன. மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விவசசாயமான ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்து உள்ளது, சுமார் 250 ஏக்கர் நிலபரப்பிலான ரப்பர், வாழை, தென்னை விவசாயம் முழுமையாக பாதிப்பை சந்தித்து உள்ளன.

தாழக்குடி, அருமநல்லூர், பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 150 ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளன. இதே போன்று திருநந்திக்கரை, முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். காட்டாற்று வெள்ளத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதால் மேற்கு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் 4 ஆவது நாளாக இருளில் மூழ்கி உள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வெள்ளம் குறைந்த பின்னரே முழு பாதிப்பு தெரிய வரும்.

கனமழை நின்றாலும் காட்டாற்று வெள்ள பெருக்கு குறையாததால் குமரி மேற்கு மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, இதனிடையே மேற்கு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை 4 ஆவது நாளாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

Similar News