ஜாதிச்சான்றிதழ் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழ் பெற இ - சேவை மையம் மூலம் விண்ணபிக்கலாம் என, குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றுகள், இணையவழி மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. பழங்குடியினர் சாதிச்சான்று கோரும் விண்ணப்பங்கள், சம்மந்தப்பட்ட ஆர்டிஒ, மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் நேரிடையாக அளிக்கப்பட்டு, சாதிச்சான்றுகள் வழங்கப்படுகின்றன .
ஆதிதிராவிடர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றுகள், இணையவழி மூலம் வழங்கப்படும் முறைகளைப் பின்பற்றி, பழங்குடியினர் சாதிச்சான்றுகளையும் தற்போது இணையவழி மூலம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது . அதன்படி, இனிமேல் பழங்குடியினர் சாதிச்சான்று கோருபவர்கள், தக்க ஆவணங்களுடன் அருகில் உள்ள இ - சேவை மையம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சான்று ஒப்புதல் செய்யப்பட்டதற்கான குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன், இ - சேவை மையம் மூலமாக சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.